கும்பேஸ்வரர்
ஸ்வாமி - ஆதி கும்பேஸ்வரர். அம்பாள் - மங்களாம்பிகை.
கும்பகோணம் ஊர் பெயருக்குக் காரணமான கோயில். பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் இருக்கும் மகாமக குளத்திற்கு மவுசு வரும். இதைத் தென்னகத்தின் ‘கும்பமேளா’ என்றழைக்கலாம். மகாமக குளத்தில் நிறைய கிணறுகள் உள்ளன. ஒவ்வொரு கிணற்றுக்கும் பின்னால் ஒரு கதை, நம்பிக்கை. எல்லா புண்ணிய நதிகளும் இங்கு ஒன்று சேர்கின்றன என்று நம்புகிறார்கள். ஒரு காலத்தில் உண்மையாக இருந்திருக்குமோ என்னவோ, இப்போதெல்லாம், இந்தக் குளத்தில் மகாமக சமயத்தில் இருப்பது லாரியில் கொண்டு வந்து கொட்டப்படும் மெட்ரோ வாட்டர்தான்.
‘சண்டே’ காலை; இன்னும் அவ்வளவாக ஊர் விழித்துக் கொள்ளவில்லை. சோம்பல் முறித்து எழலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்ததோ என்னவோ! ஆரவாரம் இல்லாத தெருக்களில் நடப்பதும் ஒரு சின்னக் குஷி. இதுவா அவ்வளவு அமர்க்களத்துடன் நேற்று இருந்தது? இன்றோ ஆடி அடங்கி ஓய்வெடுப்பது போன்ற தோற்றம். ஒரு நல்ல ‘பிரேக்ஃபாஸ்ட்’ எங்குக் கிடைக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அங்கே இரண்டு பேர் நல்ல அரட்டையில் இருந்ததைக் கண்டு, “சரியானவர்கள்” என்று யூகித்து விசாரித்தோம். அவர்கள் நேராக மங்களாம்பிகைக் கோயிலுக்கு வழி சொன்னார்கள். இது என்னடா என்று யோசித்தபோது, “முதலில் அம்பாளைப் பார்த்துவிட்டு, பின் கோயிலில் இருக்கும் அதே பெயரில் நடக்கும் ஓட்டலுக்குப் போகுமாறு” சொன்னார்கள். “மங்களாம்பிகை கஃபே” கோயில் வளாகத்திற்குள்ளேயே கனஜோராக நடக்கிறது. டிஃபன், சாப்பாடு (குறிப்பாக ரசம்) பிரமாதம். ஏனைய ஹோட்டல்களில் வெங்கடரமணா, ஆடுதுறை சீதாராம் ஆகியவைகளில் எப்பொழுதுமே ஏக கூட்டம், நல்ல சாப்பாடு கிடைப்பதினால்.
நம் நெடுஞ்சாலைகளில் உள்ள எல்லா நாயர் டீ கடைகளும் “கும்பகோணம் டிகிரி காபி” கடைகளாக மாறிவிட்டன. வெறும் பெயரில்தான் இந்த மாற்றம் என்பது வேறு விஷயம். ஆனால், கும்பகோணத்தில் நல்ல டிகிரி காபி கிடைப்பதில்லை என்பது பெரிய ஏமாற்றம்! தற்போது கும்பகோணம் டிகிரி காபிகளும் ஆலடிப்பட்டியான் மற்றும் chai கடைகளாக மாறி விட்டன.
கும்பகோணத்தில் பெரிய கடைத் தெருவில் ஒரு பட்டு ஜவுளி வியாபாரக் கடை ஒன்று உள்ளது. அநேகர் வருகை தருகிறார்கள். தரையில் மெத்தை போட்டு, அதில் உட்கார்ந்துகொண்டு துணிமணிகள் வாங்கலாம். விலை அதிகம்தான், ஆனால் தரமான பொருள் என்று நிறைய பேர் கூறுகிறார்கள். வெறுமனே பார்த்துவிட்டு ஒன்றுமே வாங்காமல் சாமர்த்தியமாகத் தப்பித்த மிகச் சில சமயங்களில் இதுவும் ஒன்று! பாத்திரக் கடைகளும் இங்கு மிக அதிகம்.
கடைத்தெருவில் பத்மாவைப் பார்ப்பது ஒரு தனியான அனுபவம்… அது எப்படி அலுக்காமல், சலிக்காமல், ஒவ்வொரு கடையிலும் ‘FOMO’ ஒரு பக்கம்… சட்டென்று ஒரு பெரிய ‘லிஸ்ட்’ நொடிப் பொழுதில் ரெடி… “அவங்களுக்கு அது, இவங்களுக்கு இது” என்று, என் ஆபீசில் வேலை பார்ப்பவர்களுக்கு முதற்கொண்டு ஏதேதோ!
மற்றபடி, வேண்டாத / பிடிக்காத / கடை இல்லாத இடங்களில் நடந்தால் புலம்ப ஆரம்பிப்பவள், கடை என்றால் எவ்வளவு நடந்தாலும் கால் வலிப்பதே இல்லை… இதுவும் ஒரு தமாஷ்தான்! எந்த ஊர் சென்றாலும் ஒரு ‘லிஸ்ட்’ கண்டிப்பாக இருக்கும்… சிங்கப்பூர் ஆனாலும் சரி, மாயவரம் ஆனாலும் சரி._
ஸ்ரீரங்கத்தில் தோசைக்கல், கல் சட்டி; மதுரையில் காட்டன் புடவை; கேரளாவில் வெண்கல ஆப்பச் சட்டி; ஹைதராபாத்தில் கண்ணாடி வளையல், பிரியாணி; பாம்பே ஹல்வா, சிக்கி, துணிமணி - எங்கே போனாலும்… இது தவிர ஏதாவது நல்லதா இருந்தா… அப்பப்பா!
யார் யாருக்கு என்னென்ன தேவைகளோ, அது அவர்களுக்கேத் தெரியாத போதிலும், பத்மாவுக்கு மட்டும் தெரிந்து விடுமாக்கும்!
எனக்கோ எல்லா ஊர்களிலும் அந்தந்த ஊர் speciality சாப்பிடுகிற சமாச்சாரம் என்றால் ரொம்பப் பிடிக்கும்! இதனால் எனக்கு எந்த ஊருக்குச் சென்றாலும், சாப்பாட்டினால் homesick ஆவதேயில்லை. உதாரணமாக, மல்லேஸ்வரத்தில் ஹொலிகே மனே “போளி”, மதுரையில் பிரேமா விலாஸ் “அல்வா”, திருவானைக்காவல் பார்த்தசாரதி ஹோட்டல் “சூப்பர்”, பம்பாய் ஸ்டேட்டஸ் “கிச்சடி” மற்றும் தாகூர் பவன் “சாப்பாடு”, இந்தியா காபி ஹவுஸ் “கடப்பா இட்லி”, கூரக்கடை “பால் கோவா”, கொடைக்கானல் தவா “பிண்டி fry”, மதுரை விசாலம் “காபி”, தஞ்சாவூரில் செல்லம்மாள் “மண்பானை சமையல்”, மஹாபலேஸ்வர் “ஸ்ட்ராவ்பெர்ரி க்ரீம்”, புனேயில் பெடெக்கெற்’ஸ் “மிசல் பாவ்” என்று சொல்லிக் கொண்டே போகலாம்.