சாரங்கபாணி கோயில்
உற்சவர்- சாரங்கபாணி, மூலவர் - ஆராவமுதன். தாயார் - கோமளவல்லி
கும்பகோணத்திற்கு உள்ளேயே இருக்கும் கோயில். பெருமாள் சன்னதி ஒரு பெரிய தேரில் அமைந்திருக்கிறது. குதிரைகளும் யானைகளும் வேலைப்பாடு நிறைந்த கல் தேரை இழுக்கின்றன. முன்னங்கால்கள் மடித்து, அதனுடைய வால் மேல்நோக்கிய அமைப்பு, அது ஓடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது! சோழர் காலச் சிற்பிகளின் கைவண்ணத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஒரு தீவிர பக்தர், உற்றார் உறவினர் யாருமின்றி, இந்தக் கோயிலிலேயே பெருமாள் சேவை செய்துகொண்டு, ஒரு தீபாவளி அன்று இறந்துவிட்டாராம். சுற்றியிருந்தவர்கள் எல்லோரும், “இந்த நல்ல நாளில் தீட்டு படுவதா? பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று அவரவர் வேலையைக் கவனிக்க எத்தனித்தார்களாம். அப்போது ஆராவமுதனே, ஒரு சிறுவன் வடிவில் வந்து, அந்த இறந்த பக்தருக்கு ஈமக் கிரியை செய்தார் என்பது வரலாறு. ஆகவே, இன்றும் தீபாவளி அன்று இந்தக் கோயிலில் தெவசம் செய்கிறார்கள். இது வேறு எந்தக் கோயிலிலும் கிடையாது என்று அறிகிறோம்.
இதன் ராஜகோபுரம் 53 மீட்டர் உயரமும், பதினோரு நிலைகளும் கொண்டது. ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு சிற்பங்கள் உள்ளன. கீழே உள்ள நிலைகளில் உள்ள சிற்பங்கள், முதன்முறையாகப் பார்ப்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். கஜுராஹோ, கோனார்க் போன்ற கோயில்களில் உள்ள சிற்பங்களுக்கு எந்த விதத்திலும் சோடை போகாமல் உள்ள அந்தச் சிற்பங்களின் வாயிலாக நாம் அறிந்துகொள்வது நிறைய விஷயங்கள். இதன் பயன் என்னவென்றால், ‘பாலிய விவாகம்’ நிறைய நடந்துகொண்டிருந்த காலத்தில் (உதாரணமாக, என் தாய்க்குத் திருமணம் ஆனபோது வயது பதினான்கு அல்லது பதினைந்து), வாழ்க்கையைப் பற்றிய உண்மைகள் வீட்டில் சொல்லிக் கொடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆகவே, பாலியல் கல்வி கற்றுக் கொடுப்பது கோயிலில்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, எந்த உறவுமே இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல என்பதை நமக்குப் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்துகிறது. புதிதாக இந்தக் கோயிலுக்கு வருகை தரும் எல்லோருமே, வெட்கத்தைப் பறைசாற்றிக் கொண்டாவது, அதைப் பார்க்காமல் போவதில்லை.
அங்கு வந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, “ஐயோ, என்ன அநியாயம்!” என்று சொல்லிக்கொண்டே, அந்தச் சிற்பங்களை வைத்த கண் வாங்காமல் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். “ரொம்ப அநியாயம் என்றால், கண்ணை மூடிக்கொண்டு போவதுதானே?” என்று நினைத்துக்கொண்டேன்.


கோயிலுக்கு மிக அருகில் நல்ல ஹோட்டல் உள்ளது. பிரமாதமான காபி மற்றும் டிஃபன் கிடைக்கிறது. அருகிலேயே ஒரு இனிப்பு, மிட்டாய்க் கடை. நல்ல தரமான இனிப்பு வகைகள், சென்னையில் கிடைப்பதை விட மிக மலிவு விலையில்.
அடுத்தது………