திருநள்ளார்
ஸ்வாமி - தர்பாரண்யேஸ்வரர். அம்பாள் - பிராணாம்பிகை.
காரைக்காலில் உள்ளது, பாண்டிச்சேரி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஜோதிடம் பார்ப்பவர்களின் favourite இடமாக ஆகிவிட்டது. ஒன்றுமே தெரியாதவர்கள்கூட ‘எதுக்கும் இருக்கட்டுமே’ என்று ஒரு விசிட் அடித்து விடுகிறார்கள்.
சனி தோஷம் தீர இந்தக் கோயிலுக்கு வருகை தருகிறார்கள். நளனை சனி தோஷம் ஆட்டுவித்த போது இந்தக் கோயிலில் வழிபட்டு, அதனிலிருந்து விடுதலை பெற்றார் என்பது வரலாறு.
ஒரு ராஜா ஓர் இடையனை இந்தக் கோயிலுக்குத் தினமும் பால் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டாராம். அந்த இடையனும் தவறாது பால் கொடுத்து கொண்டிருந்தபோது, அந்த ஊர்த்தலைவர், அதில் தலையிட்டு, அந்தப் பாலை கோயிலுக்குக் கொடுக்காமல், தனக்கே கொடுக்கச் சொல்லி தொந்தரவு செய்தாராம். பிறகு, அந்தக் கோயில் அர்ச்சகர்கள் அரசரிடம் “பால் தினமும் வரவில்லை” என்று புகார் செய்த போது, அந்த இடையன், ஊர்த்தலைவர் பேரில் இருந்த பயத்தால், ஒன்றும் சொல்லாமல் விட்டார். அதனால் கோபமடைந்த அரசர், அந்த இடையனைச் “சிரச்சேதம்” செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவை நிறைவேற்ற எத்தனித்தபோது, சிவபெருமான் தன்னுடைய திரிசூலத்தால் அந்த இடையனைக் காப்பாற்றினார் என்பது வரலாறு.
சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
சனீஸ்வரனை வணங்கிவிட்டுத்தான் சிவனை வணங்குகிறார்கள். நமது ‘கர்மா’வின் பலன்களைக் கொடுப்பவர் சனீஸ்வரன் என்று நம்புகிறார்கள். பலன்கள் நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். நாங்கள் சென்றது சனிக்கிழமை என்பதால் நிறைய கூட்டம்.
கால் கடுக்க நின்று, நேராகச் சென்று சுவாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, “என்னை மட்டும் காப்பாத்து” என்று அவசரமாகக் கோயிலுக்குச் சென்று வீட்டுக்குத் திரும்புவது ஒரு கடமை அல்லது ஒரு கட்டாயம் போலத் தோன்றுகிறது!. அப்படியானவர்களே நிறைய இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. திருநள்ளாறு போன்ற தோஷம் நீக்கும் கோயில்களில் இந்த trend நிறைய இருக்கிறது. அது ஒரு வகையான contract. எனவே, இந்தக் கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஸ்தல புராணமோ அல்லது சுற்றி இருந்த மற்ற சன்னதிகளைப் பற்றியோ அவ்வளவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
கோயிலுக்கு மிக அருகாமையில் நல்ல பில்டர் காபி கிடைக்கிறது. விலையும் மிக மலிவு. மறக்காமல் வாங்கி குடித்து “சோர்வு” நீங்கி வரவும். ப்ராஹ்மணர்களுக்கு ஏன் காபி மிக பிடித்தமான பானம் என்று எங்கள் வீட்டுக்கு வரும் “வாத்யார்” சொல்வார்:
“சுக்லாம்பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
பிரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப ஷாந்தயே.”
இதற்கு ஒரிஜினல் அர்த்தத்தைத் தவிர்த்து மாறுபட்ட அர்த்தத்தையும் அவர் சொன்னார்:
“வெள்ளை நிற பால் கொதித்து கொண்டிருக்கிறது.
டிகாக்ஷன் கலர் கறுப்பு.
அவை இரண்டும் சேரும்போது “மாநிற” கலரில் உருமாறுகிறது.
“அவா இரண்டு கையால கொடுக்கறா; நாம இரண்டு கையால வாங்கிக்கிறோம்”. ஆக மொத்தம் நாலு கைகள்.
(அதைப் பருகும்போது) நம் முகம் ப்ரகாசமடைகிறது.
நாம் “நம்முடைய சிரமங்கள் எல்லாம் தீரும்” என்று அதைப் பற்றி த்யானம் செய்கிறோம்.”
எப்படி இருக்கு?