திருப்புள்ளமங்கை

ஸ்வாமி - பிரம்மபுரீஸ்வரர். அம்பாள் - அல்லியங்கோதை அம்மை.

இந்தக் கோயிலைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கவில்லை. பத்மாவின் உந்துதலால், இந்தக் கோயிலை நீண்ட சிரமத்திற்குப் பிறகும், டாக்ஸி டிரைவரின் அலுப்புக்கு இடையிலும் எப்படியோ கண்டுபிடித்தோம். பத்மா ஒருமுறை ‘டாக்டர் சித்ரா மாதவன்’ என்கிற பிரபல வரலாற்றாசிரியர் நடத்திய பயிற்சி முகாமில் கலந்துகொண்டபோது, இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். திருஞானசம்பந்தர் 7 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார் என்றும் அறிகிறோம்.

“பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.
பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்
கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே.”

இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள சிவனைப் பற்றி “பாலைக் காய்ச்சித் தயிராக்கி அதைக் கடைந்து அதிலிருந்து வரும் வெண்ணை போன்றவர்” என்று புகழ்ந்திருக்கிறார்.

நாங்கள் சென்றபோது நடை சாத்தும் நேரம் ஆகவில்லை. ஆனாலும், கோயில் பூட்டியிருந்தது. அருகில் இருந்த வீட்டின் பெண்மணியிடம் சாவி வாங்கி, கோயில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றோம். அந்தப் பெண்ணின் குழந்தை ஏனோ எங்களிடம் ஆசையாக வந்தது. கோயில் முகப்பில் தற்காலக் கட்டிட அமைப்பில் தோற்றமளிக்கும் ஒரு சாதாரண கோபுரம். ஆனால், சற்றுக் கடந்து பத்தடி பின்புறம் சென்றால், நாம் பல நூற்றாண்டுகள் பின் சென்றது போல் தோன்றும் ஒரு பிரமிக்க வைக்கும் சோழர் கால வடிவமைப்பு! நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியவில்லை! வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத சோழர் காலத்து கற்கோயில். சில சிற்பங்கள் நம் கைப்பேசி அளவே இருந்தபோதிலும், அதன் நுணுக்கமும் வேலைப்பாடும் பிரமிப்பூட்டுபவையாக இருந்தன! இதுவே வேறு ஒரு வெளிநாட்டில் இருந்திருந்தால், இந்த வேலைப்பாட்டினை எவ்வளவு ரசித்து, சீருடனும் சிறப்புடனும் கொண்டாடி இருப்பார்கள்? நாமோ, இதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வமே இல்லாமல் இருக்கிறோமே?

இங்கு நாங்கள் பார்த்தது கல்லில் செதுக்கிய கவிதைகள். இதுவும் ஒரு விதமான வழிபாடுதான். தான் செய்யும் தொழிலைத் தெய்வமாக எண்ணி, தனது முழு உழைப்பையும், ஆற்றலையும் கொண்டு செதுக்கிய இச்சிற்பியும் ஒரு யோகிக்குச் சமமானவன் அல்லவா? அந்தச் சிற்பியின் பிரார்த்தனை சிற்பங்களாக உருவெடுத்திருக்கிறது. இதுபோன்ற கலைப் பொக்கிஷங்கள் இன்னும் எவ்வளவோ, எங்கோ, யாருக்கும் தெரியாமல், சரியான பராமரிப்பும் இல்லாமல் இருக்கின்றனவோ?

ஒரு comparison க்காக, என்னுடைய மொபைல் போனை ஒரு சிற்பத்தின் பக்கத்தில் வைத்து போட்டோ எடுத்தேன்:

Pullamangai1

Pullamangai2

pulla

அந்தக் கோயிலைப் பராமரிக்கும் பெண்ணுக்கு அதனுடைய அருமையோ, முக்கியத்துவமோ தெரியாமலே இருந்தது ஒரு முரண்பாடாகத் தோன்றியது. ஒருவேளை, அதுவும் நல்லதற்கோ என்றும் தோன்றுகிறது. அதனைப் பற்றித் தெரிந்துகொண்டால், பழனியின் மூல விக்ரஹத்தைச் சுரண்டியது போல, கும்பகோணம் கோயில்களில் இருந்த வெண்கலச் சிற்பங்களைக் களவாடியதைப் போல, இதுவும் நாளடைவில் காணாமல் போயிருக்கலாம்.

பராமரிக்கும் பெண்ணின் குழந்தை:

Pullamangai3

இந்தப் பயணத்தின் கண்டுபிடிப்பு என்று இந்தப் புள்ளமங்கை கோயிலைச் சொல்லலாம். வரலாறு பிரியர்களே, don’t miss!

Pullamangai

என்ன ஆனாலும் நம்முடைய சொந்த ஊருக்கு ஈடு இணை உண்டோ? அடுத்து அங்கு வாசம் செய்கின்ற எங்கள் குல தெய்வத்தைப் பார்க்கலாம்.