திருமீயச்சூர்

ஸ்வாமி - மேகநாத ஸ்வாமி. அம்பாள் - லலிதாம்பிகை.

“ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே” என்ற மகாராஜபுரம் சந்தானத்தின் குரலில் ஒலித்த இந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீசக்கரத்தின் மேல் கம்பீரமாக உட்கார்ந்து இருக்கும் லலிதாம்பிகை.

நாவுக்கரசரால் பாடப்பட்ட ஸ்தலம்:

“தோற்றுங் கோயிலுந் தோன்றிய இருந்திருப்போமோ கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே.”

“பொன்னம் கொன்றையும் பூவணி மாலையும்
பின்னும் செஞ்சடை மேல் பிறை சூடிற்று
மின்னு மேகலையாளொடு மீயச்சூர்
இன்ன நாள் அகலார் இளங்கோயிலே”

இந்த வரிகளின் மூலம் இந்தக் கோயிலின் சிறப்பையும், அந்த அம்பாளின் அழகின் வர்ணனையையும் நாம் அறிகிறோம்.

சுமார் 7, 8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது! கோயிலுக்கு ஏதோ புண்ணியம் பெறுவதற்கு மட்டுமே அல்லாமல் அதன் பின்னணியையும் கொஞ்சம் தெரிந்து கொண்டு சென்றால் அந்த அனுபவம் மேலும் உயர்கிறது.

வழி முழுதும் பச்சை பசேலென்ற வயல்வெளி, அங்கங்கே சின்ன குளம், குட்டை, மண்ணு ரோடு, குட்டி பறவைகளின் சத்தம்… ஹப்பா.. நகரங்களின் டீசல் புகையின் வாசனையிலிருந்து ஒரு சின்ன விடுதலை… நல்ல வேளை.. இவையாவது இன்னும் மிஞ்சி இருக்கிறதே! மாயவரத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

இது முதல் சக்தி பீடம் என்று கருதப்படுவதால், இங்கிருக்கும் அம்பாளை ‘ஆதி சக்தி’ என்று அழைக்கிறார்கள். ‘லலிதா சஹஸ்ரநாமம்’ இங்கிருந்துதான் உலகிற்கு அறிமுகமானது என்று நம்பப்படுகிறது. மிகப்பெரிய அம்பாள் - ஐந்து அடி என்று படிக்கிறோம். இந்த கோயிலில் இருப்பது போல் அம்பாள் உட்கார்ந்து கொண்டிருக்கும் சிலை வேறு எங்கும் இல்லை என்றும் கேள்வி. கோயிலைச் சுற்றி வர ஒரே கிராமீய மணம். மிகவும் சாந்தமாகவும் அழகாகவும் இருந்தது. திருப்பதி போன்ற கோயில்களும் கூட்டமும் அவர்களது ‘ஜருகு ஜருகு’வும் ஒருபுறம்; மறுபுறத்தில் லலிதாம்பிகை போன்ற கோயில்களும் அதன் ஏகாந்தமும், நிதானமும் நம்மை மிகவும் கவர்கின்றன. இந்தக் கோவிலைப் பற்றிய விசேஷம் என்னவென்றால், அம்பாள் ஒரு பக்தரின் கனவில் வந்து கொலுசு செய்து தருமாறு கேட்டுக்கொண்டதுதான்.

ஒரு கற்சிலையில் கொலுசை எப்படி கீழே விழாமல் நுழைப்பது என்ற நியாயமான கேள்வி வந்திருக்கும். இந்தக் கதை உண்மையா இல்லை யாருடைய கற்பனையா என்பது தெரியாது; ஆனாலும் ஆச்சர்யத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த அம்பாள் கற்சிலையில் கொலுசு நுழைய ஏதுவாக துவாரம் இருப்பதுதான். இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு கோயிலுக்குச் சென்றால், பெரிய பக்திமான் அல்லாதவர்க்குக் கூட வியப்பு கலந்த ஆச்சர்யம் வருவது இயல்பு!

இதே மாதிரி நுணுக்கமான சிலைகள் பல்வேறு கோயில்களில் உள்ளன. கீழே தஞ்சை பெரிய கோயிலின் ஒரு சிற்பத்தைப் பாருங்கள். அந்த இடத்தில ஒரு துவாரம் எதற்காக செய்தார்கள் என்று தெரியவில்லை:

dwaram

அந்தக் கோயிலுக்கு வந்திருந்த ஒரு குடும்பத்திலிருந்த ஒரு குழந்தை பத்மாவிற்கு கண்ணாடி வளையல் கொடுத்து மகிழ்ந்தது. வளையல்களைக் கொடுத்த பிறகு அதற்கு ஒரே வெட்கம்; ஓடிப்போய் அதன் அம்மாவின் புடவைத் தலைப்பில் ஒளிந்து கொண்டது. இந்தக் கோயிலில் பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் பறைசாற்றும் வகையில் இருந்தாலும் நமக்குள் இருக்கும் யதார்த்தவாதி நமக்கு அன்றாட வாய்ப்பாக வாழ்க்கையை நினைவுபடுத்துகிறதே - இப்படி பெண்களைப் போற்றும் கோயில்கள் இருக்கும் நாட்டில் பெண்களுக்கு எதிராக மோசமான விஷயங்களும் நடப்பது எரிச்சலாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய… ம்ச்ச். தொட்டிலை ஆட்டும் கைகள், உலகத்தை ஆள்வதில்லை. அந்தத் தொட்டிலையே எல்லா காலமும் ஆட்டிக்கொண்டிருக்கின்றன. தொட்டிலை ஆட்டி, சமையல் செய்து, மற்றவர்களுக்குப் பணிவிடைகளைச் செய்து, புதுமைப் பெண்ணாக வெளி வேலைக்கும் சென்று சம்பாதிக்கும் இன்றைய பெண்ணின் நிலைமைதான் என்ன? பெண்மையைக் கடவுளாக போற்றிப் பாடி வழிபடும் தேசத்தில், வீட்டிலிருக்கும் பெண்ணைப் போற்ற வேண்டாம்; குறைந்தபட்சம் அடக்கி ஆளாமல் அடிப்படை சுதந்திரத்தையாவது கொடுக்கலாம்!

பெண்கள் அம்பாள் மாதிரி சாந்தமாக இல்லாமல் காளியாக உருவெடுத்தால் ஒரு வேளை இந்நிலை மாறுமோ?

வேறு ஒரு கோயில் சிற்பத்தின் புகைப்படம்:

kali

இத்தனை எண்ணங்களுடன் வெளியே வந்தால் மனதை லேசாக்கும் விதமாக வழி முழுதும் ‘ஃபிரெஷ்’ நுங்கு, பதநீர், இளநீர், கரும்புச் சாறு; கொளுத்தும் வெயிலிலும் நிறைய கோயில்களில் நல்ல கூட்டம். அவரவர் தேவைகள், ஆசைகள். திருநெல்வேலி பக்கத்தில் நுங்கு “தெளிவு” என சொல்லப்படும் பதநீரில் போட்டுக் கொடுப்பார்கள். கொஞ்சம் கேட்டால் “தெளிவு"க்குப் பதிலாக கள்ளும் கிடைக்கும் என்று சொல்ல கேள்வி!! ம்ம்ம்... next time, maybe!

அடுத்ததாக நாங்கள் சென்றது கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த ஊர்….

குளத்திற்கும் தேருக்கும் பேர் போன இடம்.