திருவாரூர்

ஸ்வாமி - தியாகராஜர். அம்பாள் - நீலோத்பலாம்பிகை.

அடுத்து சென்றது திருவாரூர். சங்கீத மும்மூர்த்திகள் மூவரும் பிறந்த ஊர். என்ன ஒரு ‘ம்யூசிகல் ஹெரிடேஜ்’! ‘ஷேக்ஸ்பியர்’ பிறந்த ஊரான ‘ஸ்ட்ராடபோர்ட்-அபான்-ஏவோன்’ என்ற இடத்திற்கான ‘வெப்சைட்டை ’ பாருங்கள். எப்படி அதை கொண்டாடுகிறார்கள் என்று. அது மட்டும் அல்ல; அதனால் வரும் ‘எகனாமிக்’ benefits ஐயும் நினைத்துப் பாருங்கள். திருவாரூரை ஏன் நாம் அந்த மாதிரி கொண்டாடுவதில்லை என்ற வருத்தம் மேலோங்கி இருக்கிறது. மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் பெரிய கீர்த்தனைகளை இந்த கோயிலின் அம்பாள் கமலாம்பாள் பெயரில் ‘கம்போஸ்’ பண்ணி இருக்கார். அந்த நவா வர்ண கீர்தனைகள் ஒரு வெஸ்டர்ன் சிம்பொனிக்கு ஈடானவை. ஒரு கொசுறு செய்தி: வாதாபி கணபதி என்கிற பிரபல கீர்த்தனை, இந்த கோவிலிலுள்ள வாதாபி கணபதியைப் புகழ்ந்து பாடியது ஆகும்.

தியாகராஜர் கோயில். அடேங்கப்பா! எவ்வளவு பெரிய கோயில். கோயிலுக்குள்ளேயே ஒருவர் தொலைந்து போய்விடலாம். அவ்வளவு பெரியது. முப்பது ஏக்கர் பரப்பளவு என்று அறிந்து கொள்கிறோம். ஒவ்வொரு சன்னதியும் ஒரு கோயில் சைஸில் உள்ளது. மற்ற எல்லா கோயில்களையும் விட அதிக சன்னதிகளை உடைய கோயில் இது. தியாகராயர் சன்னதி மிக கம்பீரமாக இருக்கிறது. அம்பாள் பெயர் கமலாம்பிகை. குளத்தின் பெயர் கமலாலயம். தாமரை பீடம் என்று பொருள். இந்த நாட்டிய ஸ்டைலை ‘அஜப தானம்’ என்று கூறுகிறார்கள், அதன் பொருள் மூச்சுக்காற்றின் தாளத்திற்கேற்ப கோஷமில்லாத நாட்டியம் என்பதாகும். இந்த உலகத்தில் மன்மதன் எப்படி தன் வேலையை ஆரம்பித்தான் மற்றும் சோமாஸ்கந்தர் கதை என்பதைப் பற்றிய ஸ்வாரஸ்யமான கதைகள் இதன் பின்னணியில் உள்ளன.

வெவ்வேறு விதமான நடனங்களால் சிவனை வழிபடும் ஏழு இடங்கள்:

தியாகராஜர் கோவில், திருவாரூர் - கோஷமில்லாத நடனம்.
தர்பாரண்யேஸ்வர் கோவில், திருநள்ளார் - கள் குடித்தவர் போல் நடனம்.
காயாரோஹணஸ்வாமி கோவில், நாகப்பட்டினம் - கடலலை போல் நடனம்.
கண்ணாயிரம் உடையார் கோவில், குருமணக்குடி - சேவல் போல் நடனம்.
ப்ரஹ்மபுரீஸ்வரர் கோவில், திருப்பத்தூர் - மலரின் மேல் மிதக்கும் வண்டு போல் நடனம்.
வைமூர்நாதர் கோவில், திருவைமூர் - காற்றில் அசைந்தாடும் தாமரை போல் நடனம்.
வேதாரண்யேஸ்வரர் கோவில், வேதாரண்யம் - அன்னப்பறவை போல் நடனம்.

கள் குடித்தவர் போல் நடனம் என்று படித்தவுடன், ‘ஷாஓலின் ட்ரங்கன் மான்க்’ என்று ஒரு பழைய சினிமா படம் ஞாபகத்திற்கு வருகிறது. அதில் வரும் ஹீரோ கங்-பூ சண்டையில், குடிகாரனின் நடையைப் பின்பற்றி, எதிராளிகளை ஜெயிப்பதாகக் கதை. இங்கே திருநள்ளாறு கோயிலில் ஸ்வாமி ‘கள்’ குடித்தவர்போல் நடனம் ஆடி நம் மனங்களை ஆக்ரமிக்கிறார்!

திருவாரூரில் சிவனைப் பல்லக்கில் ஆடியபடிதான் கொண்டு செல்வார்கள். இதனால் தானோ என்னவோ எதையாவது மெதுவா செய்தால் “திருவாரூர் தேர் மாதிரி ஆடி அசஞ்சு” என்று சொல்வது வழக்கம் ஆச்சோ என்னவோ?

மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகராஜர் பிறந்த வீட்டிற்கு எப்படிப் போக வேண்டும் என்கிற அறிவிப்பு பலகை, எவ்வித ஆரவாரமும் இல்லாமல் ஒரு மூலையில் அறிவித்துக் கொண்டிருந்தது. அதாவது அங்கு இருந்ததே ஆச்சரியம்தான்!

ஷ்யாமா சாஸ்திரிகள் வசித்த வீடு தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோயிலின் பின்புறத்தில் உள்ளது. ஓர் அறிவிப்பு பலகை எதுவும் இல்லாமலேயே! இப்பொழுது அந்த வீட்டில் சாஸ்திரிகளின் descendant (எள்ளு பேத்தியோ?) ஒருவர் வசிக்கிறார்.

shyama

அடுத்ததாக ட்ரங்க் பெட்டி ஊர்._ கடல் காற்றை சற்றே சுவாசிக்கலாமே.