நாகூர் - தர்கா

நாகூர் ஷாஹுல் ஹமீது என்கிற ‘சூஃபி’ துறவி.

சுமாரான கூட்டம், நிறைய கடைகள், பளபள துணி, வாசனை ஊதுபத்திகள் என்று பரபரப்பான விற்பனை; ஒலிபெருக்கியில் தமிழ் இஸ்லாமியப் பாடல்கள் என்று ஒரு கலவை.

“யாரும் வருவார் யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவர் சன்னதியில், நானும் ஒன்று நீயும் ஒன்று நபிகள் நாயகம் முன்னிலையில்”

என்ற மு. க. முத்துவின் பாட்டு நினைவுக்கு வருகிறது.

இந்த ஊர்காரரான நாகூர் ஹனிபாவின் ‘கணீர்’ குரலில்,

“இறைவனிடம் கையேந்துங்கள் ….”

என்கிற அவருடைய பாட்டு காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.

நாகூர் ஷாஹுல் ஹமீது என்கிற ‘சூஃபி’ துறவியின் கல்லறையின் மீது கட்டப்பட்டிருக்கும் தர்கா. இந்தத் தர்காவைக் கட்ட இந்துக்கள் அதிக அளவில் பங்களித்தார்கள் என்பது வரலாறு. இங்கிருக்கும் ஐந்து ஸ்தூபிகளில் மிகப் பெரியதை தஞ்சாவூர் பிரதாப் சிங் என்கிற மராட்டிய அரசர் கட்டினார் என்பது விசேஷம். வேளாங்கண்ணியைப் போலவே இங்கும் இந்துக்கள் அதிக அளவில் வருகிறார்கள். இங்கு நடக்கும் ‘கந்தூரி’ என்கிற விழாவில் இந்து மரபைப் பின்பற்றி நாதஸ்வரம் வாசிக்கிறார்கள். தர்காவின் உட்புறத்தில் பெண்கள் செல்ல அனுமதி இல்லை.

ஆண்டாள் பெருமாளை நினைத்து திருப்பாவை இயற்றிய மாதிரி, மீரா கண்ணனை நோக்கி பஜன்ஸ் பாடிய மாதிரி, ரபீஆ அல் பாஸ்ரா என்கிற சூஃபி துறவி எல்லாம் வல்ல இறைவனைப் பாடல்கள் மூலம் அடைய வழிபட்டார். இந்த சூஃபி பெண் துறவியைப் பற்றி இன்னொரு செவி வழிச் செய்தி. இவர் ‘ஹஜ்’ பயணம் மேற்கொண்டபோது, இவருடைய பக்தியை மெச்சி, இவருக்குச் சிரமம் கொடுக்காமல் இருப்பதற்காக, ‘கஅபா’ இடம் பெயர்ந்து அவருக்குக் காட்சி கொடுத்தது என்று கேள்வி! ஒரு தாழ்த்தப்பட்ட பக்தருக்காக, உடுப்பியில் கிருஷ்ணர், அந்த பக்தருக்குச் சௌகரியமாகத் திரும்பி நின்று காட்சி தந்தார் என்கிற கதை மாதிரியே இருக்கிறதே! இந்தக் கதைகள் ஒரு பக்கம் இருந்தாலும், பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சமூகத்தில் கிடைக்கும் பாரபட்சம் குறைந்ததாகத் தெரியவில்லை.

Rabia Al Basri

ஆண்டவரின் மீது பொருத்தப்படும் துணி கூட பரம்பரை பரம்பரையாக ஓர் இந்துவின் காணிக்கைதான் என்று சொல்கிறார்கள். கையில் கட்டிக்கொள்ள மந்திரித்த கயிறு கொடுக்கிறார்கள். எண்ணெய் போன்ற திரவத்தை விரலில் தொட்டு நாக்கில் நக்கிக் கொள்ளச் சொல்கிறார்கள். பெண்கள் கையில் கயிறு கட்டுவதற்கு முன்னால், “நாங்கள் கட்டலாமா” என்று கேட்டுவிட்டுப் பிறகு கட்டுகிறார்கள். இன்றும் கூட சாதாரணமாகப் பெண்கள் கையில் விற்பனை வளையல் போட்டு விடுவது, முக்கியமாகத் திருமணம் மற்றும் இதர விசேஷங்களின்போது, நிறைய இஸ்லாமிய சகோதரர்கள்தான் என்று நம் எல்லோருக்கும் தெரியும். இங்கு இருக்கும் தர்காவைச் சேர்ந்தவர்கள், மற்ற மதத்தினர் - குறிப்பாக இந்துக்கள், இங்கு வருவதன் முக்கியத்துவத்தை நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள். ஆகவே, மற்ற மதத்தினரைப் பற்றியும், அவர்கள் நாகூர் தர்காவிற்குச் செய்திருக்கும் காணிக்கைகளைப் பற்றியும் நிறையப் பேசுகிறார்கள். ‘எகனாமிக் சென்ஸ்’ தான் ‘டிரைவிங் போர்ஸ்’ என்றாலும் கூட, மத நல்லிணக்கத்தைப் பேணுவது என்பதால் கேட்பதற்குத் திருப்தியாக இருக்கிறது. மத வேறுபாடுகளைப் பகடைக்காயாகக் கருதும் சமயத்தில், இந்த மாதிரி அமைப்புகள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நிற்கின்றன.

Nagore Durgah

Nagore Durgah2

நாகூர் ஆண்டவர் பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்படுகிறோம். சென்னை காசிமேட்டில் உள்ள நிறைய மீன்பிடிப் படகுகள் நாகூர் ஆண்டவரின் பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கும், அதன் உரிமையாளர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி. கடலுக்குச் செல்பவர்கள் எல்லோருமே அவர்தான் “அவ்லியா”. இஸ்லாமில் இந்த வார்த்தையை “கடவுளின் நண்பர்” மற்றும் “மக்களின் பாதுகாவலர்” என்ற பொருளில் கூறுகிறார்கள். நாகூர் ஆண்டவரை வழிபடும் இந்துக்கள், அவருக்குப் படகு உருவம் கொடுத்து, ஏனைய கடவுள்களான மதுரை வீரன், முனீஸ்வரன் ஆகியோருடன் சேர்த்து வழிபடுகிறார்கள்.

சூஃபி மியூசிக் நிறைய கேட்டிருக்கிறோம். ‘அலி சாபிரி சகோதரர்கள்’ என்ற பாகிஸ்தானிய குழுவின் இசையில் மயங்கி இருக்கிறோம். சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற அந்தக் கச்சேரிக்கு பத்மா கொஞ்சம் வலுக்கட்டாயமாக, using emotional blackmail, அழைத்துச் சென்றாள். “அட தேவுடா” என்று முதலில் நினைத்துக் கொண்டுதான் சென்றேன். அவையில் உட்கார்ந்து அவர்களுடைய இசையையும் பாட்டையும் கேட்ட பிறகு, எழுந்து வர மனசில்லை. இரண்டரை மணி நேரம் கட்டுண்டு கிடந்தோம். எதையும் ரசிக்கலாம்; அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை நாம் வளர்த்துக்கொண்டால் - an open mind - whether it is food, clothes, music, religion, anything - acceptance is key.

சற்று பின்னோக்கிச் செல்லலாம்; வருடம் 1947:

ஒரு முக்கியமான காலை வேளையில், இந்திய மக்கள் கண் விழித்தபோது, ஹிந்துஸ்தானி என்ற பொது வழக்கில் இருந்த மொழி திடீரென்று சட்டபூர்வமாக இந்தி என்றும் உருது என்றும் பிரிக்கப்பட்டது. இந்துக்கள் பேசியது இந்தி ஆகவும், இஸ்லாமியர்கள் பேசியது உருது ஆகவும் உருவெடுத்தன. இதன் விளைவால், பிரேமசந்த் முன்ஷி போன்றவர்களின் தரமான எழுத்துக்கள், உருது என்று கருதப்பட்டதால், பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டன. மேலும், ஷுக்ரியா, ஜரூர் போன்ற வார்த்தைகள் தூய்மையானவை அல்ல என்று ஒரு கருத்தைப் பரப்பி விட்டது. அதே மாதிரி உருதுவிலிருந்தும் சமஸ்கிருத வார்த்தைகளைத் தவிர்ப்பதை நியாயப்படுத்தினார்கள். மொழி என்பது மக்களின் எண்ணங்களிலிருந்து தாமாக வருபவை. அது பசி, தூக்கம் போன்ற ஒரு ரிஃப்ளெக்ஸ். அதில் சமயத்தைப் புகுத்துவது எந்த ஊர் நியாயம்?

அதே போன்று, நாம் “தமிழில் பேசும்போது வடக்கத்திய வார்த்தைகளையும், பிற மொழி வார்த்தைகளையும் தவிர்ப்போம்” என்று கூறுவதும் இதற்குச் சமானம்தான். ஆனால், தமாஷ் என்னவென்றால், நிறைய வார்த்தைகளைத் தமிழ் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம், அவை தமிழ் வார்த்தைகள் அல்ல என்று தெரியாமலேயே. உதாரணமாக, மன்னிப்பு என்பது தமிழ் வார்த்தை அல்ல என்பது நிறைய பேருக்குத் தெரியாமல் இருக்கலாம். பொறுத்தருள்க என்பதுதான் தமிழ் வார்த்தை. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? சாவியும் தமிழ் வார்த்தை கிடையாது. திறவுகோல் என்பதே அதற்கான தமிழ் சொல். பேசும் தமிழில் நாம் நிறைய பிற மொழிச் சொற்களை, சில சமயங்களில் நம்மை அறியாமலேயே உபயோகப்படுத்துகிறோம். ஒரு முறை ஓர் ஆட்டோ ஓட்டுனரிடம், “மருந்து கடைக்குச் செல்லுங்கள்” என்று சொன்னபோது, அவர் எங்களை நாட்டு மருந்து கடைக்கு அழைத்துச் சென்றார்! அவருக்கு “பார்மசி” என்கிற வார்த்தையும் தெரியவில்லை. கடைசியாக அவரே வெறுத்துப் போய் எங்களிடம் கேட்டார், “மெடிக்கலுக்குப் போகணுமா?” என்று. இது எப்படி இருக்கு?

இன்னொரு குட்டிக் கதை. ஒருமுறை ஒரு தமிழ் பற்றாளர் ஆட்டோவில் ஏறி, “பேருந்து நிலையம் செல்க” என்று கேட்டு கொண்டாராம். அந்த ஆட்டோ ஓட்டுனருக்கோ புரிந்தும் புரியாத மாதிரி இருந்ததாம். அவர் நேராக “ரயில்வே ஸ்டேஷன்"க்குச் சென்று விட்டாராம். தமிழ் அறிஞர் உடனே அந்த ஓட்டுனரிடம், “நான் ‘பஸ்’ பிடித்து வீட்டுக்குப் போகணும், அதற்குத்தான் பேருந்து நிலையம் போகச் சொன்னேன்” என்றாராம். உடனே, ஆட்டோ ஓட்டுநர் அவரிடம், “அதற்கு ‘பஸ் ஸ்டாண்ட்’ போகணும் என்று தமிழில் சொல்ல வேண்டியதுதானே?” என்று கோபித்து கொண்டாராம். ஹொவ் ஐஸ் இட்?

மற்ற மொழிகளிலிருந்து வார்த்தைகளை எடுத்து, நம் மொழிக்கு ஏற்றாற்போல் மாற்றிச் சொல்வதை “கடன் வார்த்தைகள்” என்று சொல்வார்கள். நம் கட்டுமரம்தான் ஆங்கிலத்தில் “கட்டமரான்” என்று ஆனது. அதே போல், ‘பக்ஷீ’ என்று ஆங்கிலத்தில், ஓசியில் கிடைக்கும் பொருளுக்குச் சொல்வார்கள். ஓசி என்பதும் ‘ஆன் கம்பெனி சர்வீஸ்’ என்பதிலிருந்து வந்ததாக இருக்கும். “பக்ஷீ” என்பது பெர்ஷியன் மொழியில் “பக்ஷீஸ்” என்பதிலிருந்து வந்தது. இந்த வார்த்தையை இந்தியில், குறிப்பாக ‘மாமூல்’ என்கிற பொருளில், நிறைய உபயோகப்படுத்துவார்கள். ஆங்கிலம் நிறைய மொழிகளில் இருந்து வார்த்தைகளைக் கடன் பெறுவதால்தான் பிரபல்யமாக இருக்கிறதோ என்னவோ, சிந்திக்க வேண்டிய விஷயம். மலாய் மற்றும் இந்தோனேஷிய பாஷைகளும் நிறைய ஆங்கில வார்த்தைகளைக் கடன் வாங்கி இருக்கின்றன. மூளையைக் கசக்க ஒரு கேள்வி: மிதிவண்டி சக்கரத்தில் இருக்கும் “ஸ்போக்ஸ்” என்னும் வார்த்தைக்குத் தமிழ் வார்த்தை என்ன? சத்தியமா எனக்குத் தெரியாது! இதனால்தான் கடன் வார்த்தைகள் நிறைய தேவை.

இப்போது கூகிள் ஜெமினி ஸ்போக்ஸ் என்கிற ஆங்கில வார்த்தைக்கு ஒரு தமிழ் வார்த்தை சொல்கிறது. அது எத்தனை பேர்களுக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆகவே அதை உபயோகப்படுத்த பெரிய தயக்கம்தான்.

ஹிந்தியிலும் நிறைய கடன் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. “மாசீஸ்” என்பது ஆங்கிலத்தில் “matches” என்பதிலிருந்து வந்து தீக்குச்சியைக் குறிக்கிறது. இன்னொரு உதாரணம்: “சந்த்ரி” என்கிற இந்தி வார்த்தை ஆங்கிலத்தில் “sentry” என்பதிலிருந்து வந்தது என்று தெரிகிறது.

இது போன்ற கடன் வார்த்தைகள் பல மொழிகளிலும் காணப்படுகின்றன. மொழிகள் ஒன்றையொன்று தொடர்பு கொள்ளும்போது, சில சொற்கள் அப்படியே அல்லது சற்று மாற்றங்களுடன் மற்றொரு மொழியில் பயன்படுத்தப்படுகின்றன. இது மொழியின் இயல்பான வளர்ச்சியில் ஒரு பகுதியாகும்.

“Where the world has not been broken up into fragments
By narrow domestic walls”

“மனிதன் தன் பேராசையால் தன்னைத் தானே பல கூறுகளாகப் பிரிக்கிறான்” என்ற தாகூரின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது. சாதி, இனம், race, colour, மொழி என்று எண்ணற்ற பாகுபாடுகளை இன்னும் மனிதர்கள் உருவாக்கிக் கொண்டே இருப்பார்களோ… புரியவில்லை.

We will continue to create more and more walls and one day these walls will suffocate us, but until then…

Cannot stop but wonder about the country (India or Bharat - not sure of that even) we are going to leave behind for the future - we seem too small and powerless in comparison to the forces of power, politics, and money which are trying so hard to change the social fabric. It seems futile many a times, but we need to go on with the hope that:

This too shall change someday, sometime. History has proved it time and again that nothing lasts and change is inevitable.”

And so we marched on and…….

our next stop was… ஒரு தீவிர பக்தனுக்காக அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய திருத்தலம்.