பிரயாணம் ஆரம்பம்
பத்மாவும் நானும் “தனியாக” குஷியாக மாயவரம் பயணம் புறப்பட்டோம். இருவரும் சேர்ந்து கோயில் கோயிலாகச் செல்லும் சாக்கில் - நெஜமா சொல்லணும்னா - ஊர் ஊராச் சுத்தலாம், கொஞ்சம் ‘ஷாப்பிங்’ செய்யலாம், ‘ப்ளஸ்’, பத்மாவிற்கு கோயில் சிற்பங்கள் மீது ஒரு நியூ ஃபவுண்ட் லவ் ‘கிரேஸ்’ கொஞ்ச நாளாக. ஒரே கல்லில் இரண்டு, இல்லை, நிறைய மாங்காய்கள்; பசங்களுக்கும் ஒரு ‘பிரேக்’, எங்களிடமிருந்து! முக்கியமா திருநள்ளார் கோயில் போக என்னிடம் யாரோ சொல்லியிருந்தார்கள். எனக்கு வேளாங்கண்ணியும் நாகூர் தர்காவும் ‘விசிட்’ பண்ண ரொம்ப நாட்களாகவே ஆசை. இன்னும் சின்ன ஆசை: அஜ்மீர் தர்காவும், சேவண் ஷெரீப் லால் ஷாபாஸ் கலந்தரும். முதலாவதே கொஞ்சம் அதிகம். இரண்டாவது பாகிஸ்தானில் உள்ளது. பார்க்கலாம், வாய்ப்பு வருகிறதா என்று!சென்னையில் இருக்கும் வேளாங்கண்ணி கோயிலுக்கும் மும்பையில் இருக்கும் ஹாஜி அலி தர்காவுக்கும் நிறைய முறை சென்றிருக்கிறேன்.
கோயம்பேட்டிலிருந்து ஓர் அரசு ‘கொடாக்கு’ பஸ்ஸில் ஏறினோம். கோயில் மட்டுமா; பஸ் கூட மாறவே இல்லை. பழமையில் ஊறுவது என்றால் கூட இது கொஞ்சம் ஓவர்தான்! நல்ல வேளையாகக் கும்பல் இல்லை, ஆகவே உட்கார வசதியாக ‘சீட்’ கிடைத்தது. ஆனாலும் ஓர் அழுக்கு மூட்டைக்குள் உட்கார்ந்து கொண்டு செல்வது போல் ஓர் உணர்வு. அதில் இருந்த மியூசிக் சிஸ்டெமில், மிகவும் சுமாரான - எல்லாரும் மறந்து போன - அதை எழுதியவரும் பாடியவரும் உள்பட - எழுபதுகளின் பாட்டுக்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அந்த பஸ்ஸின் கண்டக்டர்க்கு என்ன கஷ்டமோ, யார் கண்டார்கள்? சுமார் ஏழு மணி நேரப் பயணம். சின்ன அசௌகரியங்கள், பெரிய கஷ்டங்களாகத் தெரியவில்லை. எல்லாம் நம்ம மைண்ட்செட் தான், இருக்கும் சூழலையும் அதில் இருக்கும் எதிர்பாராத சமய சந்தர்ப்பங்களையும் ஆனந்தமாக அனுபவிப்பதற்கு. அதிசயமாக வழியில் நெடுஞ்சாலையில் ஒரு சின்ன ஹோட்டலில் காபி நன்றாக இருந்தது. மற்ற தின்கின்ற பொருள்கள் எல்லாம் சுமார். ஒரு லோக்கல் ‘பேக்கரி’ தயாரிப்பில் தேங்காய் ‘பன்’ மற்றும் ‘கேக்’ கிடைத்தது. பசியில் பத்மாவிடமிருந்து பேச்சு மூச்சு இல்லை. ஒரு வழியாகக் கிடைத்ததைத் தின்றுவிட்டு மீண்டும் ‘பஸ்’ ஏறினோம். இதுவரை பேருந்து மட்டும்தான் மட்டமாயிருந்தது; ஆனால் சாலை பரவாயில்லை. இதன் பிறகோ, சாலையும் மட்டமாக இருந்தது. ஆனாலும் இந்த அசௌகரியங்கள் ஒன்றும் பெரிய பொருட்டாகத் தெரியவில்லை!
கார்த்தால எழுந்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் கிடைத்த ஓசியான பிரேக்பாஸ்ட் (இன்க்ளூடட் இன் ரூம் ரெண்ட்) வேண்டாம் என்று சொல்லி அருகில் இருக்கும் மிகப் பிரசித்திப் பெற்ற மெஸ் சென்றோம். அந்த மெஸ்ஸில் மிகப் பிரமாதமான இட்லி, தோசை மற்றும் காஃபி கிடைக்கும் என்று சொன்னார்கள். சிறு வயதில் பத்மாவின் அம்மா அந்த மெஸ்ஸுக்குச் சென்று அதன் உணவு வகைகளைச் சுவைத்ததைப் பற்றி நிறைய கூறியிருக்கிறார். அந்தக் காலத்தில் ஓட்டலுக்குச் செல்வது என்பது, அதுவும் மாயவரத்தில், மிகவும் அரிதானதாக இருந்திருக்கும். அப்படியொரு சூழலில் யாரோ ஒருவருக்கு மாயவரத்தில் ஓர் ஓட்டல் ஆரம்பிக்கும் தைரியம் எப்படி வந்ததோ! சென்னையில் இருக்கிற நிறைய ‘நாங்க மாயவரத்துக்காரர்கள் ஆக்கும்’ என்று சொல்லித் திரியும் நபர்கள் எல்லாரும் அந்த மெஸ்ஸுக்குக் கண்டிப்பாகச் சென்று வருமாறு எங்களுக்கு அன்புக் கட்டளை இட்டார்கள். ஆனால் அதெல்லாம் அந்தக் காலம் என்று அறிந்து கொண்டோம். அந்த மெஸ் வெறும் பழைய பெயரில் ஓடிக் கொண்டிருக்கிறது. மாயவரத்தில் நம்ம சாப்பாட்டுக்குக் கஷ்டம்னா அப்புறம் என்னத்தைச் சொல்ல? சமீபத்தில் மறுபடியும் மாயவரம் போன போது, அதே மெஸ் பழையபடி மிக நன்றாக இருந்தது என்பது மிகப் பெரிய சந்தோசம்.
எங்கள் சிறுவயதில் இருவர் வீட்டிலும் டிபிக்கல் மிடில் கிளாஸ் லிவிங்தான். உறவுக்காரர்கள் வீடுகளுக்குக் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்காக மட்டுமே பிரயாணம்; ஹாலிடே, சைட் சீயிங் எல்லாம் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை; அதற்காக நாங்கள் ஏங்கியதும் இல்லை. “டேக் லைஃப் அஸ் இட் கம்ஸ் டைப்”, ஒவ்வொரு கால கட்டத்திலும் சின்னச் சின்ன சந்தோஷங்கள் பொதிந்திருந்தது என்னவோ உண்மைதான். வருஷா வருஷம் திருப்பதி ட்ரிப் - ஒரு பத்து பதினைந்து பேர்களுக்குக் குறையாமல் - கடக்கு முடக்கான பஸ், நெரிசல், புளியோதரை, இட்லி, தயிர் சாதம், அடுத்த நாள் வரையில் - முடிந்தவரை ஓட்டி விட்டு, நேராக தரிசனம் முடித்து கையோடு பஸ் பிடித்து, வீட்டுக்கு வந்து சமைத்துச் சாப்பிடுவதற்குள்… அப்பப்பா! இப்போ மாதிரி டாக்ஸி, ஹோட்டல், ஸ்விக்கி என்பதெல்லாம் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது!
அதுக்கப்புறம் மிகவும் சௌகரியமாக டாக்ஸி பயணம் ஆரம்பமானது. டாக்ஸி டிரைவரிடம் பேச்சு கொடுத்தோம். பதினைந்து வருடங்கள் சென்னையில் வண்டி ஓட்டிக்கொண்டிருந்ததாகக் கூறினார்.
ஓட்டுநர் - “சென்னையில தான் வண்டி ஒட்டிக்கிட்டு இருந்தேன்; டீமானிடைசேஷன்ல ரொம்ப அடிபட்டுருச்சு; சென்னையில் சம்பாத்தியம் அதிகம், ஆனால், செலவு அதைவிட அதிகம். சென்னையில வரது எங்க போகுதுன்னே தெரியாம இருந்துது; இங்கே வீடு இருக்கு; செலவும் கம்மி; கெட்ட பழக்கத்துக்குப் போற சான்ஸும் கம்மி. அதான் ஊரோட வந்துட்டேன். ஏங்க ஒரு டவுட்- பொண்ணை ஸ்கூல்ல சேக்கனும்- சிபிஎஸ்இ ஸ்கூல்தான் நல்லதுன்னு சொல்றாங்க- ஆனா என்ன 50000 ரூபா டொனேஷன் கூசாம கேக்குறாங்க; எப்படியாவது தேத்திடலாம்னுதான் இருக்கேன்; இல்லேன்னா நிலத்தை அடகு வெச்சா கூட பரவாயில்லை; வீட்டுலே அவுங்க ரொம்ப விரும்புறாங்க; பெரிய வீட்டுப் பசங்க மாதிரி டை கட்டிக்கிட்டு நம்ம புள்ளகளும் ஸ்கூல் போவணும்னு; சரி நகை நட்டா கேக்குறா; படிப்புக்குத் தானே கேக்குறாங்க - நியாயம் தானே - நமக்குத்தான் இந்த பொழப்பு - பசங்க ரெண்டும் பெரிய படிப்பு படிக்கணும்னு கனவு கண்டுக்கிட்டு இருக்கேன்; மஹமாயீ மனசு வெக்கணுமே.” கார் ஓட்டுநர் கேட்க…
பத்மா: “முதல்ல ஒண்ணு புரிஞ்சுக்கோங்க; எல்லா பாடத்திட்டமும் அந்த வயசுக்கு என்ன தேவையோ அதைத்தான் சொல்லிக் கொடுக்கச் சொல்லுது - அது அரசு பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி, இன்டர்நேஷனல் ஸ்கூலாக இருந்தாலும் - ஆனா எங்க வித்தியாசம்னா - சொல்லித்தர்ற விதத்துல அம்மாவோ அப்பாவோ ஒருவராவது குழந்தை என்ன படிக்குது, அதுக்கு நம்ம உதவி எங்கே தேவைப் படுத்து, அப்படின்னு தினமும் அந்த குழந்தைகூட நேரம் செலவிட்டா தான் அந்த குழந்தையால மேலே வர முடியும். இப்ப எங்களையே எடுத்துக்கோங்க - என் ஹஸ்பண்ட் அரசு உதவி ஸ்கூலில் தமிழ் வழி கல்வி - நான் தனியார் பள்ளி ஆங்கில கல்வி - அறிவியிலேயோ அல்லது வேலை வைப்பிலையோ ஒண்ணும் பெரிய வித்யாசம் இல்லை - ஆனா இப்ப சூழ்நிலை மாறி வியாபாரத்தனம் அதிகமானதுனால இது ரொம்பப் பெரிய விஷயம் மாதிரி தோணுது. Englishஐ ஒரு மொழியாகக் கத்துக்கிட்டாலே போதும்தான் - என்ன செய்ய - நுனி நாக்கு ஆங்கிலத்துக்கு இங்க அவ்ளோ மதிப்பும் மரியாதையும் இருக்கத்தான் செய்யுது - பக்கத்து ஸ்டேட் கேரளாவில் பிரதானமாக அவங்க மொழியிலேயே தான் படிக்கிறாங்க - பதினோராவதிலிருந்து தான் இங்கிலீஷ் மீடியம்.
எது எப்படியோ நீங்க உங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற நல்ல அரசு பள்ளியைப் போய்ப் பார்த்து விசாரிச்சு சேர்த்து விடுங்க - அது மட்டும் போதாது. இந்த டொனேஷனுக்குக் கொடுக்கற காசை அந்தக் குழந்தைக்கு அதன் தனித் திறனை வளர்த்துக்க அப்புறம் நிறையப் புத்தகங்கள் வாங்க செலவு செய்யலாமே? என்ன நான் சொல்றது?
மேலும் RTE சட்டம்படி உங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற தனியார் பள்ளிக்கூடத்துல ஃப்ரீ சீட் கிடைக்கக்கூட வாய்ப்பு இருக்கு; அந்த வெப்சைட்டைப் பார்த்து அப்ளை பண்ணுங்க".
வேலை தேடி நகரத்திற்குச் சென்று, அந்த நகர வாழ்க்கையை வாழ முடியாமல், மீண்டும் ஊர்ப்பக்கம் செல்லும் இவர்களின் நிலைதான் என்ன? நம் நாட்டின் வருங்கால சந்ததியினருக்கு தரமான கல்வி இன்னும் ஓர் எட்டாக் கனியாகவே இருக்கிறது…ச்சே!
கிராமங்களின் பின்தங்கிய நிலை, நகரங்களுக்கு குடிபெயர்தல்; அந்த வாழ்க்கை நகரமா நரகமா என்ற புரியாத ஒன்று. இதன் விளைவு - சமூகத்தில் வளர்ந்து கொண்டே போகும் ஏற்றத் தாழ்வுகள், அரசாங்கத்தினால் (எந்த அரசு எந்த கட்சி வந்தாலும் மாறாத நிலைமை) நல்ல இலவசக் கல்வி மற்றும் பேசிக் அமீனிடிஸ் கொடுக்க முடியாத நிலை - இந்தியாவில் இருந்து கொண்டு இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. ‘நார்வே’ போன்ற நாடுகளில் எல்லாம், தரமான கல்வி, மருத்துவம் ஆகியவை இலவசம் என்று படிக்கிறோம். பொருளாதார ஏற்றத் தாழ்வு இருந்தாலும், அடிப்படை வசதிகளும் வாய்ப்புகளும், எல்லா மக்களுக்கும் வஞ்சனை இல்லாமல் கிடைக்கின்றன.
அந்த சிந்தனைகள் ஒரு புறம் இருக்க, அன்றைய நாள் முழுவதும் நிறைய கோயில்கள் சென்றோம். ஒவ்வொரு ஊராகப் பார்த்த ஒவ்வொரு கோயிலுக்குப் பின்னாலும் ஒரு கதை. அந்தக் கதை நிஜமா இல்லையா என்றெல்லாம் ‘கமல் பாஷையில்’ ஆராய்ச்சி செய்யாமல் அனுபவிக்க வேண்டும். லாஜிக்கை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி விட்டால், இன்னுமொரு சகாப்தத்தை நோக்கி பயணிக்கலாம். பக்தி இலக்கிய பொக்கிஷத்தில் மூழ்கி விடலாம். ஒவ்வொரு தூணிலும் இருக்கும் சிற்பங்களில் இருக்கும் வேலைப்பாடுகளின் அழகிலும் நேர்த்தியிலும் நாம் தொலைந்து போகலாம்!

பல அரிய கலைகள் - பாட்டு, நடனம், சிற்பம், ஓவியம், உணவு என பல கலைகளின் பிறப்பிடம் நம் நாடு - ஒவ்வொன்றிலும் ஓர் உன்னதம்! தேர்ச்சி! இவைகளின் அருமையை அறியாத சமூகம்; நமது நாட்டு கலைகளின் மகத்துவமும் அதன் uniquenessஐயும் இந்த generation தெரிந்து கொள்ளாமலேயோ அல்லது சரிவர புரிந்து கொள்ளாததனாலேயே அது நம்மை விட்டுச் சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஏழு எட்டு ஆண்டுகள் ஹிஸ்டரியையும் ஜாகிரபியையும் மனப்பாடம் செய்து என்ன லாபம்? நம் மொழியின் மீது இயல்பான பற்றும் நம் கலாசார சின்னங்களின் மீது பெருமையும் அதை பாதுகாக்கும் பொறுப்பையும் இந்தக் கல்வித் திட்டம் அளிக்காதது வேதனைக்குரியது அல்லவா? பொதுவாக பெற்றோர்களுக்கும் இதைப் பற்றிய சிந்தனையோ அறிந்து கொள்ளும் ஆர்வமோ இருப்பதாகத் தெரியவில்லை. எதுவுமே வெள்ளித் திரையில் வந்தால் மட்டுமே அதற்கு ஒரு மவுசு; கள்ளினால் போதையுற்றவர்கள் போல சினிமா மோகம் நம்மவர்களை ஆட்கொண்டிருக்கிறது; சினிமா பாட்டு, சினிமா நடனம் என்று தங்கள் வாழ்க்கையை அதைச் சுற்றியே அமைத்துக் கொள்கிறார்கள். நம் மக்களுக்கு நம் கலாச்சாரம் மற்றும் கலைகளின் தொன்மையையும் பெருமையையும் எப்படியாவது பரப்ப முயற்சிக்க வேண்டும். கோயிலுக்குச் செல்வதும், பொட்டு வைத்துக் கொள்வதும், சம்பிரதாயங்களை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதும் கலாச்சாரம் ஆகாது; இவைகள் பண்பாட்டின் “எக்ஸ்ட்டேர்னல் மார்க்கர்ஸ்” - கடைப்பிடிப்பது சுலபம் - அவைகளில் ஊறி, அதன் உட்கருத்துக்களைப் புரிந்து கொண்டு, ஆழ்ந்து அனுபவித்து அதைப் பாதுகாத்து, வரும் சந்ததிகளுக்கு அதை நல்ல நிலையில் நாம் விட்டுச் செல்வது நம் கடமை அல்லவா? ஒரு சாதாரண பூ தொடுப்பது முதல், கோலம் போடுவது, நம் பாரம்பரிய உணவு வகைகளைப் பற்றி தெரிந்து இருப்பது, நம் மொழி, அதன் இலக்கியங்கள் இவைகளைப் பற்றி அறிந்தவர்களாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்று உணர்கிறோம் அல்லவா? இந்தப் புரிதல் இல்லாமல் நம் சமூகம் எவ்வாறு முன்னேற்றம் அடைய முடியும்? வரலாறு கூறும் செய்திகளை நாம் தெரியாதவர்களாக இருந்தால், நாம் முழுமையானவர்களாக இருக்க முடியாது - பண்டைய காலத்தினரின் நல்ல பழக்கங்களையும் வாழ்வு முறைகளையும் அறிந்து கொண்டு அதில் இருக்கும் நல்லவைகளை எடுத்துக் கொள்ளவும், தவறுகளைத் தொடராமல் இருப்பதற்கும் வரலாறு ஒரு திறவுகோல்.
ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அதனுடைய கலை இலக்கியங்களின் வளர்ச்சியை கண்டு மதிப்பிடலாம் அல்லவா? கலை, இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி மாதிரி, அந்த காலகட்டத்தையும், வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கின்றன. “நடுவில் சில பக்கங்களைக் காணோம்” என்கிற மாதிரி, நடு வழியில் நாம் எதையோ தவறி விட்டு விட்டோமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. அந்த காலத்துடைய ‘கலெக்ட்டிவ் விஸ்டம்’ இப்போதைய சந்ததியினருக்குச் சேரவில்லையோ என்ற நினைப்பு எழாமல் இல்லை. முகலாய மற்றும் ஆங்கிலேயே குடியேற்றத்தினால் வந்த வினையோ? அதற்காக முகலாயரையோ, ஆங்கிலேயரையோ குறை கூறுவதற்கில்லை; நம் கலாச்சாரத்தையும் அதனில் இருந்து நாம் பெற்றிருக்க வேண்டிய நல்ல சமாச்சாரங்களையும் கொஞ்சம் தொலைத்து விட்டோமோ என்று தோன்றுகிறது. நம்மை ஆள்பவரைப் பின்தொடர்வதையும், அவர்களைப் பார்த்து பிரமிப்பதையும் ‘ஸ்டோக்ஹோல்ம் ஸின்ரோம்’ என்று சொல்வார்கள். நம்மில் பலபேர் ஆங்கிலம் பேசுவதைப் பெருமையாக நினைக்கிறோம்; அவர்களுடைய வாழ்க்கை நெறிகளை, நமக்கு இடர்பாடு இல்லாமல் ஒத்துப் போகும் விஷயங்களில், பின்பற்றப் பாடுபடுகிறோம். ஒன்றும் தவறில்லை; ஆனால் நம்முடைய வேர்களை அறிந்து கொள்ளாமல் இருப்பது நம்முடைய நஷ்டம். “ஸ்.ஓ.ஏ.ஸ்” என்கிற லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில், நம்முடைய திருவள்ளுவர் சிலையைப் பார்த்தால், நாம் விட்டதை வெள்ளைக்காரர்கள் பிடித்துக் கொள்வார்கள் போல் இருக்கிறது. லண்டன் ஓர் ஆச்சர்யமான நகரம். எவ்வளவு ‘மாடர்ன்’ ஆக இருந்தாலும் எந்த அளவிற்கு பழமையைப் போற்றி பாதுகாக்கிறார்கள், எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், எவ்வளவு ‘museums’ நல்லபடியாக இயங்குகின்றன என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. லண்டனில் ஒரு போட்டோ கண்காட்சி நடத்தினார்கள். அதில் இரண்டு வகையான போட்டோக்கள். ஒரு தொகுப்பில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த போட்டோக்கள். இரண்டாம் தொகுப்பில் அதே இடங்களில் அதே ஆங்கிளில் சமீபத்திய போட்டோக்கள். ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
நாங்கள் வெளிநாட்டவர்களுடன் குறிப்பாக Europeans உடன் பழகிய தருணங்களில் அந்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் பொதுவாக தங்களுடைய கலாச்சாரத்தைப் பற்றி நிறைய தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்; ஒரு மோனலிசா, ரெம்ப்ராண்ட், பிக்காசோ போன்ற ஓவியத்தைப் பற்றியும், மொசார்ட், வாக்னர், பீத்தோவன் போன்ற பெயர்களுக்கும் அறிமுகமானவர்களாக இருக்கிறார்கள்; அதைப்பற்றி ஆர்வமும் பெருமையும் உடையவர்களாக தெரிகிறார்கள்; ஆனால், அதே வயதில் இருக்கிற நம் இளைஞர்கள் இதை அவ்வளவாக மதிப்பதில்லை - நம் கலைகளான, வார்லி, மதுபானி, சுங்குடி போன்றவைகளை அடையாளம் காண முடியுமா என்பது சந்தேகம்; எம்.எஸ் சுப்புலக்ஷ்மி, பீம்சென் ஜோஷி, பத்மா சுப்ரமண்யம் போன்றவர்களை யார் என்றே தெரியாதவர்கள் - ஒரு பாரம்பரிய இசைக்கச்சேரி அல்லது ஒரு நடன நிகழ்சியை ஒரு முறை கூட பார்த்திராதவர்கள் நிறைய பேர் இருப்பது ஒரு வருத்தமான விஷயம் அல்லவா? சமூக ஏற்ற தாழ்வுகளும், சாதி மத வேறுபாடுகளும், ஒரு விதமான சிந்தகனையையும் தூண்டாத பாட திட்டமும் இதற்கான காரணங்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நம்முடைய பெருமை மிக்க பழைய காலத்தினையும் அதன் ஞாபகங்களையும் கோயில்கள் மூலமாகவும் அதன் ஓவியங்கள், சிற்பங்கள், அதைத் தழுவிய இயல் இசை நாடகம் மூலமாக ஓர் அறிமுகம் கொள்வது என்பது மிக அவசியம் என்றே தோன்றுகிறது.