முடிவுரை
மாயவரம் மற்றும் அதற்கு அருகாமையிலும் இன்னும் நிறைய கோயில்கள் உள்ளன. ஏறக்குறைய எல்லா கோயில்களும் பழம்பெருமை வாய்ந்தவை, வரலாறு முக்கியத்துவம் உடையவை. ஆனாலும் ஒரு சித்தர் சொல்லியது மனதிற்குள் தோன்றிக் கொண்டே இருந்தது. “கோவிலாவதேடா, குளங்களாவதேடா, கோவிலும் மனத்துள்ளே, குளங்களும் மனத்துள்ளே". கடவுள் எங்கும் இருக்கிறார் என்றால், எதற்காக ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று வழி பட வேண்டும்?
கபீர் கூறியதாவது, “கடவுள், மூர்த்தியில் இல்லை, தீர்த்த யாத்திரையில் இல்லை. கோயிலில் இல்லை மசூதியில் இல்லை. நமக்கு உள்ளேயே, மிக அருகாமையில் இருக்கிறார். நம்மிடமே தேடுங்கள், கடவுள் மிக எளிதாகக் கிடைப்பார்”.
நம்மில் அநேகர் கடவுளை வணங்குவது, ஒன்று சொர்கத்தை எதிர்ப்பார்த்து அல்லது நரகத்திலிருந்து தப்புவதற்கு. எதையுமே எதிர்பாராமல் கடவுள் மேலுள்ள அன்பினால் மட்டுமே வழிபடுவது என்பது எத்தனை பேரால் முடியும்? முன்னே சொன்ன சுஃபி துறவி ‘ரபீஆ அல் பாஸ்ரா’ - எதையும் எதிர்பாராமல் கடவுளை வழிபட்டார் என்று சரித்திரம் கூறுகிறது. கர்ணன் தானம் கொடுத்தது, “தனக்கு புண்ணியம் மற்றும் அதன் பலன்கள் நிறைய கிடைக்கும்” என்று நினைத்ததால் அல்ல. அதனால்தான் அவனால் தனக்குக் கிடைத்த புண்ணியத்தையே தானமாகக் கொடுக்க முடிந்தது இல்லையா?
கோயிலுக்கு நாம் சென்றால் நமக்குப் புண்ணியம் என்றால், அங்கேயே இருக்கும் அர்ச்சகருக்கு எவ்வளவு புண்ணியம்? ஆனால், அப்படி ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லையே? மதுரை வீரன் போன்றவர்கள் மனிதர்களாகப் பிறந்து, அவர்களுடைய செயல்முறையினால் தெய்வமாக வழிபடத் தக்கவர்களாக ஆகிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். நாம் அவர்கள் நடந்துகொண்டதைப் பின்பற்றாமல், அவர்களுடைய நடைமுறையின்படி வாழ முயற்சிக்காமல், அவர்களை ‘அபிஷேகம்’ மற்றும் ‘ஆரத்தி’ செய்து வழிபட்டால், என்ன அர்த்தம், எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுப்பினால், நம்மை ‘நாத்திகன்’ என்று முத்திரை குத்தி, ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்றேத் தோன்றுகிறது. கடவுள் நம்பிக்கை என்பதன் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதை ஓர் ஊன்றுகோலாக வைத்துக் கொண்டு, அதன் மூலம் நம்மை நாமே உற்று நோக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது சற்றே கடினமான ஒன்று; எனவே, குழந்தைகள் பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவது போல, நாமும் சடங்கு மற்றும் சம்பிரதாயங்களில் மட்டும் நம் கவனத்தைச் செலுத்தி, அவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு திருப்தி அடைகிறோம். இதனால், கடவுளிடம் நிறையக் கோரிக்கைகள், பிரார்த்தனைகள்; இந்த நமது weak points-ஐ முன்னிலைப்படுத்தி, அதைச் சுற்றி வியாபாரம் - புதிது புதிதாக, நவீன முறைகளில் வேண்டுதல்கள்; ஜோதிடக்காரர்கள்; நாளுக்கு ஒரு குரு; அவர் பின்னால் செல்ல ஒரு கூட்டம். எங்கேயோ தொலைத்ததை எங்கோ தேடும் முயற்சி!
ஒரு சுவாரஸ்யமான விஷயம் நினைவுக்கு வந்தது.
சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த இருவரில் யார் நல்லவர்? முதல்வர், சுத்த சைவம், போதைப் பழக்கம் இல்லாதவர், ஏகபத்தினி விரதன், அலங்கரிக்கப்பட்ட இராணுவ வீரர்; இரண்டாமவர், கடும் அசைவம், குடிகாரர், திருமணம் ஆகியிருந்தபோதிலும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகக் கருதப்பட்டவர், பணக்காரத் திமிர் பிடித்தவர்.
நாம் இந்த விளக்கத்தை மட்டும் வைத்துப் பார்த்து ஒருவரை எடை போட்டால், அதை ஆங்கிலத்தில் ‘ஸ்டீரியோடைப்’ என்று சொல்வார்கள். அது எல்லாத் தருணங்களிலும் சரியாக இருக்காது.
யார் நல்லவர் - பதில்? முதல்வர் - அடால்ப் ஹிட்லர். இரண்டாமவர் - வின்ஸ்டன் சர்ச்சில்.
. இப்பொழுது சொல்லுங்கள், யார் நல்லவர் என்று!
கடவுள் பக்தி என்பது வெவ்வேறு விதமாகப் பல்வேறு மக்களிடம் வெளிப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொள்வோர் கூட, பக்தியைத் தன்னை அறியாமலேயே வெளிப்படுத்தலாம்.
கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவருடைய திறமையை உலகிற்கு வெளிக்கொண்டு வந்தவர் ஜி. எச். ஹார்டி என்கிற இங்கிலாந்துகாரர்.
இரண்டு பேருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு: ஒன்று கணிதத் திறமை; இரண்டாவது ரொம்பக் கூச்ச சுபாவம் உடையவர்கள். இதைத் தாண்டிப் பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு: ராமானுஜன் பெரிய பக்திமான்; ஹார்டியோ தூய நாத்திகர். ஹார்டி என்கிற நாத்திகர் இல்லையேல், ராமானுஜன் என்கிற பக்திமானுடைய கணிதத் திறமை உலகிற்குப் பயன்படாமலே போயிருக்கலாம்! “உங்களுடைய கண்டுபிடிப்புகளிலேயே தலை சிறந்தது எது” என்று ஒரு நிருபர் கேட்டபோது, ஹார்டி, சற்றும் தயங்காமல், “ராமானுஜனை கண்டு பிடித்ததுதான்” என்று கூறினாராம்.
என்னைப் பொறுத்தவரையில், அவர்களுடைய கணித ஈடுபாடு, ஒரு வகையிலான கடவுள் வழிபாடுதான் - ஹார்டி அதை ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும்!
“கலாச்சாரம் என்பது என்ன? பழங்காலத்தில் கடைப்பிடித்து வந்த பழக்கவழக்கங்களை அப்படியே செய்வதைக் கலாச்சாரம் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். பண்டைய காலப் பழக்கவழக்கங்களைத் தெரிந்துகொண்டு, அதை இந்தக் காலத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதே கலாச்சாரம்” என்று எங்கோ படித்ததாக நினைவு.
புடவை அணிவது, பொட்டு வைத்துக்கொள்வது, கோலம் போடுவது, பண்டிகைகளைக் கொண்டாடுவது இவைகளும் தொன்றுதொட்டு வருபவைதான்; எனவே, இதுவும் கலாச்சாரம்தான். இது மட்டும் கலாச்சாரம் ஆகுமா? இது கலாச்சாரத்தைக் குறிக்கும் சில புறக்குறியீடுகள்; இவற்றின் ஆழ்ந்த அர்த்தத்தை உணராமல் அப்படியே கடைப்பிடிப்பது நம் நோக்கம் அல்ல. நமது கலாச்சாரத்தின் அடிப்படையான குடும்ப உறவுகள், விருந்தோம்பல், எளிமையான வாழ்க்கை முறை, மத நம்பிக்கையை விடவும் உயர்ந்த இலக்கான ஆன்மிகம் போன்றவற்றை நாம் உணர்ந்து பின்பற்றினால், அது நம் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்!
இது முழுக்க முழுக்க நாங்கள் இருவரும் சேர்ந்து விளையாட்டாகச் செய்த ஒன்று; எங்களுடைய rant; இதைச் செய்ததில் எதோ ஒரு சந்தோஷம்; அதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் இன்னும் கொஞ்சம் குஷி; உங்கள் பொறுமையை அளவுக்கு மேல் சோதித்திருந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல 😉
நன்றி
இதைப் படித்து, அவர்களுடைய மேலான கருத்தைச் சொன்னதற்காக பத்மாவின் அம்மா சரோஜா மாமிக்கும், என்னுடைய அக்கா நீலாவுக்கும், பத்மாவின் நண்பி - ஆசிரியை மீனாக்ஷிக்கும், மற்றும் சில நண்பர்களுக்கும் …….
“ஆன்லைன்” புத்தகமாக மாற்ற உதவி செய்த அனந்திற்கும்….
“எடிட்டிங்க்” செய்த அனுவிற்கும் …..
நுணுக்கமாகவும் ஸ்ரத்தையாகவும் “proof-read” செய்த எழுத்தாளராகிய எனது தமக்கை டாக்டர் ரேவதி ராமச்சந்திரனுக்கும்……
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஒப்புக்கொண்ட என்னுடைய மருமகள் நித்யாவிற்கும் ……
வாசித்தவர்களுக்கும் ….